எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியத்தில் ஒன்று. இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல கால கட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒரு சேரத் தொகுக்கப்பட்டது.
தொகுக்கப்பட்ட காலம் கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.
அகநானூறு அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, 'நெடுந்தொகை' (நெடுமை+தொகை.நெடிய அல்லது நீண்ட பாடல்களின் தொகுப்பு) என்றும் கூறுவர்.
களிற்றியானை நிரை(1-120)
மணிமிடை பவளம் (121-300)
நித்திலக் கோவை (301-400)
என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.
களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல
Praise

