
Kannaki Puratchik Kappiyam
சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிகழ்ச்சிகளைக் கவிஞர் நீக்கி விடுகிறார். கணவனைப் பெறவேண்டுமென்றால், கண்ணகி சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற குளங்களிலே மூழ்கி மன்மதனைத் தொழ வேண்டும் என்று தேவந்தி என்ற தோழி கூறுகின்றாள். சிலப்பதிகாரக் கண்ணகி அது சிறப்பாகாது என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். பாவேந்தரின் கண்ணகி “உன் தீய ஒழுக்கத்தை இங்கு நுழைக்காதே” என்று எச்சரிக்கின்றாள். மதுரையைக் கண்ணகி தன் ஆற்றலால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறியதை மாற்றினார் பாரதிதாசன். கண்ணகிக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு மக்கள் மதுரை நகர்க்குத் தீயிட்டனர் என்றார் கவிஞர். கண்ணகி வானநாடு போனதாகக் கூறப்பட்டதை மாற்றி மலையிலிருந்து விழுந்து இறந்தாள் என்று கூறினார் கவிஞர். கண்ணகி காவியம் கவிஞரின் படைப்பில் சீர்திருத்தக் காவியமாயிற்று.
Praise
