
Kurinjiththittu
குறிஞ்சித் திட்டு’ என்ற கவிதை நூல் 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் வெளியானது. இந்நூலுக்கான முன்னுரையில் இக்கவிதைப் படைப்பைத் தாம் இரு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதத் தொடங்கி, முக்கால் பகுதி போல முடிவடைந்த பிறகு அது குறித்து நினைவு இல்லாமல் போனதாக பாவேந்தர் பாரதிதாசன் கூறியுள்ளார். பின்னர், நூலை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்ட பிறகு, பெரிதும் முயன்று, மீண்டும் முன்னர் எழுதியவற்றைப் பலமுறைப் படித்து நினைவிற்குக் கொண்டு வந்து தொடர்ந்ததாகவும் எழுதியுள்ளார். முதலில் எழுதிய வேகமும் ஆர்வமும் மட்டுப்பட்டுப் போனது குறித்து வருந்தி, நூலின் சுவை குன்றியிருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ச்சி விட்டால் ஏற்படக்கூடிய இத்தகைய இடையூற்றைக் கவனத்தில் கொள்ளுமாறும் இளங்கவிஞர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிக எளிய கவிதை வடிவில் எழுதப்பட்ட இந்தக் கவிதை நூலின் கதைக் களம் சமகாலத்துத் தமிழக வரலாற்றுக்கு இணையாகவே செல்கிறது. ஆனால், கதை நடப்பது குமரிக்குத் தெற்கே நடுக் கடலில் உள்ள ‘குறிஞ்சித் திட்டு’ என்ற கற்பனையானதொரு குட்டித் தீவில். சென்னையில் இருந்து தெற்கே மூன்று நாள் கப்பல் பயணத் தொலைவில் உள்ளது குறிஞ்சித் திட்டு. கதை நடக்குங் காலத்தில் இன்னமும் அங்கு முடியாட்சி நிலவுகிறது. குடிமக்கள் அங்குத் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பழங்குடித் தமிழ் மக்கள். அங்கு ஐரோப்பியர் போன்ற அயலார் வந்து குறிஞ்சித் திட்டின் ஆட்சியைப் பிடிக்கவில்லை, தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை. ஏனெனில் குறிஞ்சித் திட்டு தீவைச் சுற்றிக் கடலில் சுழல்கள் அதிகம், அவை குறித்து அறியாது தீவை அணுகும் கப்பல்கள் கடலில் மூழ்கிவிடும் (பெர்முடா முக்கோணம்/Bermuda Triangle
Praise
