
Anthology 2
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாக சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார். புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். அவருடைய கவிதைகள் 3 தொகுப்புகளாகக் கிடைக்கின்றன. இரண்டாம் தொகுப்பில் திராவிட நாட்டுப் பண் முதலாக 66 தலைப்புகளில் எழுதிய கவிதைகள் அமைந்துள்ளன. முதல் ஒலிக்குதிரில் இரண்டாம் தொகுப்பின் 1 முதல் 18 வரையிலான பாடல்கள் அடங்கியுள்ளன. இரண்டாம் ஒலிக்குதிரில் இரண்டாம் தொகுப்பின் 19 முதல் 45 வரையிலான பாடல்கள் அடங்கியுள்ளன. மூன்றாம் ஒலிக்குதிரில் இரண்டாம் தொகுப்பின் 46 முதல் 66 வரையிலான பாடல்கள் அடங்கியுள்ளன.
Praise
