சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
அமுதும் தேனும் என்ற கதைப் பாடல் தொகுப்பில் மங்கையும் மாவீரனும், அந்த உழவனும் அணைக்குடி வள்ளலும், விதவையும் வேதாந்தியும், கண்ணீர் நதி, வெந்நீரில் வெந்தவன், அமுதும் தேனும், மன்னனும் மண்சட்டியும் என்று ஏழு சரித்திர நிகழ்வுகளாகக் கருதப்படும் நிகழ்வுகளை மரபுப் பாடல்களில் தந்திருக்கிறார். கலித்தாழிசைக்கே உரிய சந்தத்தில் துள்ளித் துள்ளி ஓடுகின்றன தமிழ்ச்சீர்கள்.
Praise

