
கோவலன் கதை
கோவலன் கதை பெரிய எழுத்துக் கோவிலன் கதை என்றும் கோவலன் கதை என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவிலன் கதையைப் புகழேந்திப் புலவர் என்பவர் எழுதியுள்ளார். நாட்டுப்புற மக்களிடையே காணப்பட்ட கோவிலன் கதையை அப்படியே மக்கள் விரும்பும் வண்ணம் இசையுடன் கூடிய கதைப்பாடலாகப் புகழேந்திப் புலவர் இயற்றியுள்ளார். நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அமைப்பிலேயே இக்கதை ஆசிரியரால் கூறப்படுகின்றது. இந்நூ கதையில் வினாயகர் துதியோடு தொடங்கி சுப்பிரமணியர் துதி, சொக்கநாதர் துதி, திருமால் துதி, சரஸ்வதியம்மன் துதி ஆகிய கடவுளர்களின் துதியானது இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் புலவர் நேரடியாகவே கதையின் வரலாறு என்று கதையைக் கூறத் தொடங்குகின்றார். கோவிலன் கதைப் பாடலில் ஊழ் கொள்கையானது கதையின் தொடக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது. கதையின் ஒவ்வொரு பகுதியிலும் இக்கொள்கையானது ஆசிரியரால் வலியுறுத்தப்படுகின்றது.
அரசியலில் தவறிழைத்தோரை அறக்கடவுளே தண்டிக்கும் என்ற கருத்தானது புகழேந்திப் புலவரின் கோவலன் கதையில் ஆழமாகவும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. சிலம்பின் செல்வாக்கினால் புகழேந்திப் புலவர் கண்ணகியே காளியாக உருமாறி, அழிப்பதாகப் படைத்துக் காட்டுகின்றார்.
கண்ணகி பாண்டியர் அரசவைக்குச் செல்வதாக இளங்கோவடிகள் படைத்துக் காட்டுவார். ஆனால் புகழேந்திப் புலவரோ பாண்டியர்கள் கண்ணகியைத் தேடிவருமாறு படைத்துக் காட்டுகின்றார். அப்பாண்டியர்கள் ஆறாயிரம் பேரையும் அழித்தொழிக்கின்றாள் காளியாகிய கண்ணகியாள். கண்ணகியைக் காளியின் மறுவடிவாகக் கொண்டே புலவர் கோவலன் கதையை நகர்த்துகின்றார். மாதகி பல கொடுமைகளைக் கோவலனுக்குச் செய்யும் கொடுமையான பரத்தையாகக் கோவலன் கதையில் சித்திரிக்கப்படுகிறாள். பரத்தையரை நாடினால் எவ்வாறெல்லாம் துன்புற நேரிடும் என்பதை மாதகி வசந்தமாலை ஆகியோரின் வழி புகழேந்தியார் தெளிவுறுத்துகிறார். சிலம்பின் செல்வாக்கால் பிற்காலத்தில் எழுந்த இந்த கதைப்பாடல் பனுவலானது பல்வேறு வகையிலும் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்ட கதையமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் இந்த நூலைக் கேட்கலாம்.
Praise
