
Odu Shanti Odu
“அவ்வழியாகப் பெரிய அலுமினிய கேனில் பால்காரர்கள் பால் எடுத்துக்கொண்டு டி.வி.எஸ் 50ல் வருவார்கள். அவர்களிடம் “தயவுசெஞ்சி கொஞ்சம் மெதுவாக ஓட்டுங்கண்ணே. உங்க பின்னாடியே ஓடி வர்றேன்” என்பேன். காரணம் அது காட்டுப் பாதை. தெரு விளக்குகள் கிடையாது. தூரத்தில் வெளிச்சம் தெரியும். பால்காரர் டி.வி.எஸ் 50யின் முன்புற விளக்கு வெளிச்சத்தைப் பின்தொடர்ந்து பிரதான சாலையை அடைவேன்.”
“பிறகு வேறொரு உள்ளறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். என்னுடைய உடைகள் அனைத்தையும் அவிழ்க்கச் சொல்கிறார்கள். அந்த அறையில் ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தார்கள். எனக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. வேறு வழியில்லை. கட்டிலில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள். கையைத் தூக்கு, காலைத் தூக்கு என்றெல்லாம் சொன்னார்கள். ஒவ்வொருவரும் அருகில் வந்து பரிசோதனை செய்தார்கள். அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். நீண்ட நேரம் நிர்வாணமாக இருந்தேன். உடல் முழுக்கப் பரிசோதிக்கிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆங்கில மொழி எனக்குச் சரளமாக வராது. அதனால், அவர்கள் கேட்கும் நிறைய கேள்விகளுக்கு என்னால் சரிவரப் பதிலளிக்க முடியாமல் தவித்தேன்.”
இந்தியாவுக்காக 2006ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சாந்தி. ஆனால் பாலியல் பரிசோதனை செய்யப்பட்டு அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.
சாந்தி தன்னை பெண் என்றே உணர்கிறார். தான் பெண் என்பதில் சாந்திக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உடல் வடிவமும் உடையுமா ஒரு பெண்ணை பெண் என நிர்ணயிக்க முடியும்? இந்தச் சமூகத்தின் பொதுப் புத்தி சார்ந்த கேள்விகளையும் சர்வதேச அளவில் தனக்கு நேர்ந்த அவமானங்களையும் ஒரு சேர எதிர்கொள்கிறார் சாந்தி. தன்னை ஒதுக்கிய இச்சமூகத்தின் முன்பு ஒரு வெற்றிப் பெண்ணாக வலம் வர அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற ஓட்டப் பந்தய வீராங்கனையும் பயிற்சியாளருமான சாந்தி சௌந்தர்ராஜனின் சுயசரிதை இது.
எழுத்தாளர் சாந்தி சௌந்தர்ராஜன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Praise
