
Thirikatukam Asarakkovai
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதியவர்.
பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
Praise
