
Sanjivi Parvathathin Saral
பாரதிதாசனை அறியாத இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது.
பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்லவேண்டும் என்று சொல்கிறார் புதுமைப்பித்தன். பாரதிதாசன், முதன்முதலில் படைத்த தொடர்நிலைச் செய்யுள் (சிறிய காவியம்) சஞ்சீவி பர்வதத்தின் சாரல் இது பஃறொடை வெண்பாவினால் அமைந்தது. பல சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்லும் பாங்கில் ஒரு கதையைச் சொல்வதாக அமைந்தது. ஓர் அழகிய சூழலில் கதை நிகழ்கிறது. அந்த இயற்கைச்சூழல் ஒரு மலைச்சாரல். சஞ்சீவி பர்வதம் என்பது அம்மலையின் பெயர். குப்பன் என்ற இளைஞன் ஒருவன் தன் காதலி வஞ்சி என்பவள் வரவுக்காகக் காத்திருக்கிறான். அவளும் வருகிறாள். மனமகிழ்ந்து அவளை முத்தமிடச் செல்கையில் மறுக்கிறாள் அவள். காரணம் கேட்கிறான் குப்பன். முன்நாள் சொன்னபடி குப்பன் அந்த மலையிலிருக் கும் இரண்டு மூலிகைகளைப் பறித்துத் தரவேண்டும் என்கிறாள் வஞ்சி. இல்லையென்றால் என் உயிர் இருக்காதுஎன்று மிரட்டுகிறாள். நீ கல்லில் நடந்தால் கால்கடுக்கும், மற்றும் கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்கிறான் குப்பன். வாழ்வில் எங்கும் உள்ளது தான், வாருங்கள்என்கிறாள் வஞ்சி.
இம்மூலிகைகள் அசாதாரணமானவை. ஒன்றைத் தின்றால், உலகின் மாந்தர்கள் அனைவரும் பேசும் பேச்சையெல்லாம் கேட்கலாம். மற்றொன்றைத் தின்றால், இவ்வுலகில் நடக்கும் நிகழ்ச் சிகளையெல்லாம் பார்க்கலாம். ஆதலால் மூலிகையின் ஆசையை விடு என்கிறான் குப்பன். கேட்கும் வஞ்சிக்கோ இன்னும் அதிகமாக ஆசை மூள்கிறது. கோபமுற்ற குப்பன், என்னடி பெண்ணே, இது தகுமோ பெண்களுக்கு? என்கிறான்
Praise
