
ரங்கோன் ராதா
அண்ணா 1947ல் எழுதிய புதினம் ரங்கோன் ராதா. திராவிட இலக்கியத்தின் இலக்கணம் முழுக்க inclusive என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடும். 40களில் அதற்கு முந்தைய சில நூறு ஆண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் எப்படிச் சிதைவுற்று இருந்தது என்பதைக் காண்பிப்பதே அண்ணா தொடங்கி சில தசாங்கங்களில் திராவிட இலக்கியத்தின் முனைப்பாக இருந்தது. திராவிடம் என்றாலே ஆரிய எதிர்ப்பு என்ற அனுமானம் பொய் அல்லது பேருண்மையின் ஒரு சிறு துளியே என்பதே அண்ணா மற்றும் கலைஞர் இலக்கிய ஆக்கங்களில் இருந்து வெளிப்படும் உண்மையாகும். சமகாலத்திய சமுதாயச் சீரழிவுகள், பிறழ்வுகள் ஆகிய போக்குகளை உள்ளவாறு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவையே இவ்விருவர் இலக்கியங்கள். தவிரவும் அரசியல், மாநில உரிமைகள், மொழியுணர்வு, இன உணர்வு, பொதுப் பொருளாதாரம், இலக்கிய மேன்மை போன்றவை பற்றிப் பேசுவதற்கென்றே திராவிட எழுத்துப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. படைப்பிலக்கியத் துறையில் அண்ணா மற்றும் கலைஞரின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது. சித்தாந்தவியலும் படைப்பிலக்கியமும் கைகோர்த்து அன்றைய திராவிட எழுத்துப் பணியைப் பீடு நடை போடச் செய்தன.
ரங்கோன் ராதா என்ற கவர்ச்சிகரமான தலைப்பில் மூட நம்பிக்கை, ஆணாதிக்கம், பேராசை, திருமண உறவின் பிறழ்வுகள், வெள்ளந்தியானவர்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதி, பக்தி துறவு மந்திரம் மாந்திரிகம் என்ற போலி வேடங்களுக்குப் பின் மறைந்திருக்கும் கபடம், துணையற்ற பெண்கள் சீரழிவு, துணிந்து தலை நிமிரும் பெண்களின் வலிமை, சம காலத்திய இளைய தலைமுறையினரின் லட்சிய வேகமும் தீர்மானமும் என்ற இன்னோரன்ன இழைகளைக் கோர்த்து அண்ணா எழுதிய புதினமே ரங்கோன் ராதா. கலைஞரின் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த திரைப்படம் அண்ணாவின் முழு எழுத்து வீச்சை வெளிக்கொணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படவியலுக்கே உரித்தான வரையறைககுள் பரந்த திரைச்சீலை உள்ள புதினத்தை அடக்க முடியாது என்பதற்கு சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பானுமதி, ராஜசுலோசனா, எம்.என்.ராஜம், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் குலதெய்வம் ராஜகோபால், பி. எஸ். ஞானம் என்ற பெரும்படையே அந்தப் படத்தில் இருக்கின்றனர். என்றாலும் விரிந்த திரையை வெள்ளித்திரையில் சுருக்கும் போது சில பல நட்டங்கள் தவிர்க்க முடியாது போய்விட்டன.
Praise
